Wednesday, April 22, 2009

ஸ்பகெட்டி வெஸ்டர்ன்களும், மீட்பால் தழுவல்களும்


புழுதியோடு சேர்ந்து பறக்கும் காற்று, வெறிச்சோடிய வீதிகள், காற்று எழுப்பும் வினோதமான ஓசை, முன்னங்கால் தெறிக்க ஓடும் குதிரைகள், தொழில் புரட்சியின் குழந்தைகளான ரிவால்வர்கள், நீராவிப் புகையை எழுப்பி வரும் இரயில் வண்டிகள், எப்போதும் சண்டைகள் நிரம்பி வழியும் மதுக் கடைகள், நீண்ட தோல் அங்கிகளுடன் வலம் வரும் கெளபாய்கள், இவைகள் இல்லாத ஒரு வெஸ்டர்ன் சாத்தியப்படுமா??!!
அது என்னமோ தெரியவில்லை. கெளபாய் என்றாலே என் நினைவுக்கு வருவதுகிளிண்ட் ஈஸ்ட்வுட்தான். அவருக்கு முன்னாலே ஹென்றி போன்டா, ஜான் வெய்ன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், கெளபாய் என்ற பதம் தமிழ்நாட்டில் அறிமுகமானது ’கிளிண்ட் ஈஸ்ட்வுடி’னால் தான். யார் இந்த கெளபாய்கள் என்று தெரிந்து கொள்ள சிறு வயதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது உண்டு. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள டி.என்.டி, ஸ்டார் மூவிஸில் போடப்பட்ட அனைத்து படங்களையும் பார்க்க ஆரம்பித்தேன் (அப்போது டி.வி.டி எல்லாம் கிடையாது. இருந்தாலும் தேனி மாநகரத்தில் ரெம்ப கஷ்டமுங்கோ).

என்னை மிகவும் பாதித்த படம் ‘Unforgiven'. ஆனால் இப்போதைய தலைப்பு இந்த படத்தைப் பற்றி அல்ல. ’செர்ஜியோ லியொனி’ என்ற ஆங்கிலமே தெரியாத இத்தாலிய மேதை எடுத்த ‘ஸ்பகெட்டி வெஸ்டர்ன்’ (Sphagetti Western) படங்களைப் பற்றி. இந்த வெஸ்டர்ன் திரைப்படங்கள் பெரும்பாலும் இத்தாலியில் எடுக்கப்பட்டதால், அமெரிக்கர்கள் இத்தாலிய உணவான ஸ்பகெட்டியோடு இணைத்து அழைக்க ஆரம்பித்தனர். 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ லியொனி இணையில் வந்த முதல் படம் ‘Fistful of Dollars'. மிக நீளமான காட்சியமைப்புகள், டெக்னிகலர் மற்றும் சினிமாஸ்கோப் உதவியுடன் அமைக்கப்பட்ட மிகவும் அருகில் எடுக்கப்பட்ட க்ளோஸ் - அப் காட்சிகள், வெஸ்டர்ன் திரைப்படங்களை மறு வாசிப்பு செய்ய வைத்தன. குற்றங்கள் அதிகம் நிகழும் ஒரு நகரத்திற்கு வரும் பெயர் தெரியாத கெளபாய் ஒருவன், அங்கு இருக்கும் இரு வன்முறை கும்பல்களை உருத்தெரியாமல் ஆக்கி அந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி தருவதே கதை. மிகச் சாதாரண கதையாக இருப்பினும் கதை சொல்லப்பட்ட விதம், காட்சியமைப்புகள், இசை (என்னியோ மேரிகோனி) போன்றவை படத்தை மட்டுமல்லாது வெஸ்டர்ன் திரைப்படங்களின் தரத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றன. 

கிளிண்ட் ஈஸ்ட்வுட், செர்ஜியோ இணையில் அடுத்தடுத்து, 'For a Few Dollars More', மற்றும் ஆகச் சிறந்த படமான ‘The good, The bad and The Ugly' போன்ற படங்கள் அதே பெயர் தெரியாத கெளபாயை முன்னிலைப் படுத்தி வெளி வந்தன. எனக்கு  மிகவும் பிடித்த வெஸ்டர்ன் படங்களாக இவை இருந்தன, ‘யோஜிம்போ’வைப் பார்க்கும் வரை. 

அகிரா குரோசேவா, தொஷிரோ மிஃபுனே இணையில் வெளிவந்த படம் தான் ‘யோஜிம்போ’. 'ரோஷோமான்’, ‘செவன் சமுராய்’ படங்களால் உலக பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்த இருவரும் அளித்த உலகின் மிகச் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம் தான் ‘யோஜிம்போ’. படத்தின் கதை??!! அப்படியே ‘Fistful of Dollars'. என்ன இங்கே ‘சமுராய்’ என்றால் அங்கே ‘கெளபாய்’. ‘யோஜிம்போ’வை தழுவி எடுத்த  செர்ஜியோ லியோனி, அகிரா குரோசேவா’வுக்கு நன்றி செலுத்தும் வகையில் படத்தின் டைட்டிலில் கூட அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஸ்பகட்டியோடு இணைந்த மீட்பால் (Meat Ball) போல அப்பட்டமாகத் தழுவி எடுத்து விட்டார் செர்ஜியோ. பல வருடங்களுக்குப் பின் செர்ஜியோ ஒரு பேட்டியில், அகிரா குரோசேவாவிடம் மன்னிப்புக் கேட்டதாக தகவல். 

இருப்பினும், செர்ஜியோ லியோனியின் ‘Once Upon a Time in West' திரைப்படத்தை மறக்க முடியுமா. அதிலும் அந்த படத்தின் பொறுமையை சோதிக்கும் அந்த நீளமான ஆரம்ப காட்சியை பல தடவை பார்த்து டி.வி.டியில் கீறல் விழுந்து விட்டது. சிறு நெருடல்கள் இருப்பினும், வெஸ்டர்ன் திரையுலகின் இறவாத மேதை செர்ஜியோ லியோனி என்பதில் ஐயமில்லை.

Saturday, April 11, 2009

இரா. முருகனும் 'உன்னைப்போல் ஒருவனும்'

ஹிந்தியில் வெளியாகி பரபரப்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற 'எ வெநஸ்டே' திரைப்படத்தை தமிழில் கமல் மறு ஆக்கம் செய்வதாக கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு ஒரு நல்ல திரை எழுத்தாளர் தேவை. இல்லையென்றால் சொதப்பல் தான் என்று எண்ணி கொண்டு இருந்த போது தான், இரா. முருகன் இந்த படத்திற்கு எழுத்தாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சுஜாதாவுக்கு அடுத்து தமிழில் சயின்ஸ் பிக்சன் எழுத யாரும் இல்லையா என்று கேட்டால் தயங்காமல் இரா.முருகனை சுட்டிக் காட்டுவேன். அவரின் 'சில்லு' கதையை படித்த பின் யாருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உதறல் எடுக்காமல் இருக்காது. 1996 இந்தியா டுடே 'இலக்கிய மலரில்' வெளியான அவரின் 'சிலிகான்' (சிறுகதையின் தலைப்பு சரியா என்று தெரியவில்லை) என்னுடைய கணிப்பொறி வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசையை மறு யோசனை செய்ய வைத்தது. இன்றைய மென்பொருள் நண்பர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைப் பற்றி அன்றே இந்த சிறுகதையில் எழுதி விட்டார் இரா.முருகன் .

எனக்கு மிகவும் பிடித்த கதை அவரின், 'இரண்டாம் ஆட்டம்' சிறுகதை தொகுப்பில் வெளி வந்த 'சேது'. இராமேஸ்வரத்தில் வாளிகளை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தங்களாக சுற்றி காட்டுவதற்கு நிறைய கைடுகள் இருப்பார்கள். அப்படி ஒரு கைடிடம் வரும் பெரியவர் ஒருவர், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக அனைத்து தீர்த்தங்களுக்கும் அழைத்து செல்ல சொல்லுவர். அப்படி சுற்றி காடும் கைடிடம் தன் வாழ்க்கையில் செய்த ஒரு மிகப் பெரும் பாவத்தைப் பற்றி விவரமாக சொல்லுவர் அந்த பெரியவர். முடிவில் தான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் தற்கொலை தான் என்று கடலில் குதித்து விடுவார். அதை அந்த கைடும் தடுக்க மாட்டார். கதையின் முடிவில் வரும் இறுதி வரி அந்த கைடு, ஏன் அந்த தற்கொலையைத் தடுக்க வில்லை என்ற புதிர் முடிச்சை அவிழ்க்கும். ஆனால் அந்த முடிச்சு எனக்கு பொட்டில் அடித்து போல ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. புத்தகத்தை மூடி வைத்து ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாது சலனமற்று உக்கார்ந்து இருந்தேன்.

இன்னொரு மிகவும் பிடித்த கதை 1997 தினமணி பொங்கல் மலரில் வெளி வந்த 'பூச்சி'. நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம். பல சமயங்களில் அந்த அடையாளங்கள் அவர்களுக்கு பட்ட பெயராக வாய்க்கும். சிலருக்கு நல்லதாக வாய்க்கும், பலருக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும் விதம் வாய்க்கும். அப்படி ஒருவன் தான் 'பூச்சி'. 'ஆழ்வார்', 'சைக்கிள் முனி' போன்றவை அவரின் ஆகச் சிறந்த சிறுகதைகள்.


'அரசூர் வம்சமும்' ,'நெ.40 இரட்டை தெருவும்' படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுஜாதாவை என் அப்பா கேட்க நினைத்த கேள்வி தான், இரா. முருகனுக்கும், "எப்பிடி சார், உங்க வேலைப் பளுவுக்கும் நடுவுலயும் எழுதுறீங்க?".

இவரைப் பத்தி மேல தெரிஞ்சுக்கனும்னா இங்க போங்க:
http://www.eramurukan.in/tamil/home

Wednesday, April 8, 2009

தனக்கு தானே ஆப்பு வைப்பது எப்படி - விளக்குகிறார் கேப்டன்!!

ஷப்பா!! தேர்தல் வந்தாலும் வந்தது, நம்ம மொக்கை மாயாண்டி மாமாவை விட நம்மாளுங்க அறிக்கைன்ற பேர்ல கெட்ட மொக்கைய போடுறாங்க. 'சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' - அந்த கதையா நம்ம கேப்டன் தனக்கு பப்ளிசிட்டி வர்றதுக்காக எதையோ சொல்ல, அது அவருக்கே ஆப்பு ஆகி போச்சு.


'எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ.

ஆனாலும் கேப்டன் உண்மையிலே பாவமுங்க. பின்னே ஒரு மனுஷனுக்கு மாத்தி, மாத்தி பல ரூபங்கள்ல ரிவீட் வந்தா என்ன தான் பண்ண முடியும். இதெல்லாம் பத்தாதுன்னு அவரு கட்சிகாரர் ஒருத்தருக்கு இன்னொரு பிரச்சனை.
அது யாருன்னு பார்த்தா நம்ம மா பா பாண்டியராஜன். இந்தியாவில் மிகப் பெரும் வேலைவாய்ப்பு நிறுவனமான மா பா'வை நிறுவியவர். அது மட்டுமல்ல, நல்ல இலக்கிய ஆர்வலர். பல சேவை நிறுவங்கள் நடத்தி வருகிறார். அந்த சேவை நிறுவனகள் மூலம் ஆரம்பித்தது தான் சிக்கலே.அவருடைய சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் சில உதவிகள் செய்யப் போக, அது தேர்தல் கமிஷன் காதுக்கும் , மூக்குக்கும் எட்ட அவருக்கு அதுவே ஆப்பாகி இருக்கிறது. தேர்தல்னு வந்தா எல்லாரும் 'உண்மையான' அரசியல்வாதி ஆயிடராங்கப்பு. ஜெ. கே. ரித்தீஷுக்கு எல்லாம் பாண்டியராஜன் நூறு மடங்கு தேவலாம். இது மாதிரி சீப்பான பப்ளிசிட்டி பண்ணாம, கொஞ்சம் நேக்கா கேப்டனும் அவரோட கட்சிக்காரங்களும் வேலை பார்த்தாங்கனா நடுநிலையாளர்கள் ஒட்டு அத்தனியும் அவருக்குதேன்.

இந்த தேர்தலில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் எனக்கு பிடித்த வேட்பாளர் மா பா பாண்டியராஜன் தான். பார்க்கலாம் வை. கோ வை ஜெயிக்கிறாரா இல்லையானு??!! கேப்டனோட படம் சும்மா நக்கலுக்கு தானுங்கோ. கேப்டன் ஆர்வலர்கள் காண்டு ஆகாதீங்கோ.

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

Sunday, April 5, 2009

ஜெ. கே. ரித்தீஷ் - சும்மா வருமா சுனாமி

என்னத்த சொல்வேனுங்கோ? ஆனந்தம், ஆச்சர்யம், ஆனால் இதெல்லாம் மெய்யாலுமே நடக்குதுங்களா? தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரிலிசை, 'அயன்' பட ரிலிசை வுட ஆவலா எதிர்பார்த்து இருந்தேனுங்கன்னா. பாத்தா இன்ப அதிர்ச்சிக்கு மேல இன்ப அதிர்ச்சிங்கன்னா. நம்ம 'நாயகன்', வருங்கால 'தளபதி', பாலைவனத்தில் ஏங்கி கிடந்த எங்களுக்கு கிட்டிய 'கானல் நீர்' ஜெ.கே. ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியில நிக்க போறாருங்கோ.


நம்ம மொக்கை மாயாண்டி மாமாவுக்கு ஒரு நிமஷம் மூச்சு பேச்சு இல்லீங்கோ. "மாப்பிள்ளை, நீ நெஜமாத்தான் சொல்றியானு" 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி பத்து வாட்டி கேட்டு கான்பிர்ம் பண்ணாரு. நானும் மாயாண்டி மாமாவும் என்னைக்கு 'மினி சாந்தி' தியேட்டர்ல 'கானல் நீர்' பார்த்தோமோ, அன்னைக்கே தலைவர் ஜெ. கே. ரிதீஷோட ரத்தத்தின் ரத்தமான 'உடன்பிறப்புகள்' ஆகிட்டோம்.

நான் அந்த நியூச படிச்சதும் அப்பிடிக்கா இமாஜிநேசனுக்கு போயிட்டேன். அண்ணன் எம்.பி ஆகிட்டா பாராளுமன்றத்துல அவரோட 'கன்னிப் பேச்சு' (எவண்டா அவன் 'பன்னிப் பேச்சுனு' சொல்றது... த்தா உதைப்பட்டு சாகப்போற) எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். என்னால முடியலீங்கன்னா. சபாநாயகருக்கு பிரைன் பிரீஸ் வராம இருந்த சரிதான்.

ஆனா சார் ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. தி.மு.க கூட்டணிக்கு அவங்களோட சின்னம் மாதிரியே ரெம்ப ஒளிமயமான எதிர்காலம் இருக்குதுங்கோவ். தலைப்புக்கு எழுதுனதுக்கும் சம்பந்தமே இல்லையேன்னு தயவு செய்து கேக்காதீங்க.

அண்ணனோட நாயகன் படத்துல இருந்து ஒரு தத்துவார்த்துமுள்ள பாட்டை கேட்டு குஜால்டியா இருங்க.

ஹலோ பாஸ் எங்க அதுக்குள்ள அப்பீட் ஆகுறீங்க. அண்ணன் ஜெ.கே. ரிதிஷ நாலு வார்த்த புகழ்ந்து பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

Friday, April 3, 2009

போடுங்கம்மா ஓட்டு - ஏதாவது ஒரு சின்னத்தை பார்த்து...

மொக்கை மாயாண்டி மாமாவும் நானும் உக்காந்து எங்க ஊரு டீகடையில ( வேற என்ன McDonalds தானுங்கோ) உக்காந்து கொரிச்சுகினு இருந்தோம். "மாப்பிளை தேர்தல் வருது, நீ ஊருக்கு போகலையான்னு" கேட்டாரு. நானோ "அட நீங்க வேற மாமா, அவன் அவன் இந்த ரிசெஷன் டையத்துல வேலை கிடைக்க மாட்டேங்குது'னு புலம்பிகிட்டு கெடக்கான். இதுல எங்கிட்டு ஊருக்கு போறது"னு நான் என் பாட்டை பாடுனேன்.

உடனே மாமா டென்ஷன் ஆகிட்டாரு. "அது எப்பிடி மாப்பிளை. ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஓட்டு உரிமையை விட்டு கொடுக்க முடியுமா?". எனக்கோ கெட்ட காண்டு. "யோவ்!! நீ இந்த சம்மர் ஊருக்கு போறதுனால என்ன வாருறியா. நான் ஓட்டு போடறதுக்காக இங்க இருந்து இந்தியா போகனுமா. தப்பு லேது மாமு"னு என் பங்குக்கு நானும் டென்ஷன் ஆனேன்.

மாமா சொன்னதை யோசிச்சு பார்த்தா அவரு சொல்லுறது ஒரு வகையில நியாயம் தான்னு தோனுதுங்கோ. ஆனா என்ன பண்றது, திரை கடல் ஓடியும் திரவியம் தேடுனு எங்க ஆயா சொன்னத தட்டாம இங்க ஓடியாந்துட்டேன்.

நம்ம ஊருல தேர்தல் சூடு பிடிச்சிருச்சு போல இருக்குங்கண்ணா. தி.மு.க இன்னைக்கு நாளைக்கோ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்னு சொல்றாங்கோ. கேப்டனை பார்த்து ரெம்ப நாளாச்சு, 'மரியாதை'ல பார்க்கலாம்னு எதிர்பார்த்தா, படத்தை இப்போதைக்கு தடை பண்ணிட்டாங்களாம். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

நான் ஊருல இருந்த பொது திருமங்கலம் இடை தேர்தல் நடந்துச்சு. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. அசால்டா நூறு கோடி பணத்தை (உங்க பணமும், என் பணமும் தான்) போட்டு தி.மு.கவும், அ.தி.மு.கவும் சூதாடுனாங்க. திருமங்கலத்துல நான் இருந்திருக்க கூடாதான்னு கூட யோசிச்சேன். பின்ன என்னங்க, ஒரு ஓட்டுக்கு அஞ்சாயிரம் ரூவா குடுத்த வேணாம்னு சொல்லுவீங்களா. நீங்க வேணாம்னு தான் சொல்லி பாருங்களேன்.

போன பாராளுமன்ற தேர்தல்ல ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டேன். பாவம் அந்த வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கலீங்கோ. இருந்தாலும் ஓட்டுரிமையை விட்டு குடுக்க கூடாதுன்னு போட்டுட்டு வந்தேன். அதே மாதிரி கலைஞர் பண்ற குடும்ப அரசியல் பிடிக்கலைனோ, அம்மா பண்ற 'ராமர் பால' பாலிடிக்ஸ் பிடிக்கலைனோ, கேப்டனோட படம் வரலைனோ, தைலாபுரம் தோட்டத்துகாரங்க தெனமும் வுட்ற அறிக்கை புடிக்கலைனோ, இதர விஷயங்கள் பிடிக்கலைனோ ஓட்டு போடாம இருந்துராதீங்கோ.

யாரையுமே பிடிக்கலையா கொறஞ்ச பட்சம் 'ஒ' சின்னத்துல ஓட்டு போடுங்க. அதாங்க 49 ஒ அதை நிரப்பி குடுங்கோ. இல்லேன்னா உங்க ஓட்டு உறுதியா கள்ள ஓட்டு தேன். ஹ்ம்ம்... என் ஓட்டை எவன் போடப் போறானோ??!!!

ஒரு டைமிங் வீடியோ...

குரங்கணி - இது எங்க ஏரியா ஊட்டி


அது என்னமோ தெரியலீங்க. அப்பா கூட ஊர் சுத்தறது'னா அப்பிடி ஒரு குஷி. அதுவும் அப்பாவோட சுசுகி மாக்ஸ் 100 பைக்'ல அப்பா ஓட்ட, நான் பின்னாடி உக்காந்து போறது தனி சந்தோசம் (இப்ப அத வித்தாச்சு :( ). இந்தியா போயிருந்தப்போ அம்மா நச்சரிப்பு தாங்காம குல தெய்வம் கோவிலுக்கு நானும் அப்பாவும் கெளம்புனோம். அப்பிடி போயிட்டு திரும்பி வரப்ப "குரங்கணி போகலாமானு" அப்பா கேட்டாரு.

நான் மாட்டேனு சொல்லுவேனா. வுடு ஜூட். போடிநாயக்கனூர்'ல (தேனி மாவாட்டம்) இருந்து 15 கல்லு தொலைவுல இருக்குதுங்க நம்ம குரங்கணி. போடியில இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல 'முந்தல்'னு ஒரு கிராமம் இருக்கு. அங்க ரெண்டு ரோடு பிரியும். பீச்சாங்கை பக்கமா போனீங்கன்னா 'மூனாறு'. சோத்துக்கை பக்கமா போனா நம்ம 'குரங்கணி'.நீங்க ஊட்டி, கொடைக்கானல்' ஒரு வாரம் சுத்தி பார்குறதும் ஒரு மத்யான நேரம் இங்க பைக்'ஐ எடுத்துட்டு சுத்துறதும் ஒண்ணுனு சொல்லுவேன். அப்பிடி ஒரு அருமையான இடமுங்கோ.இந்த ஊருல இருக்குற ஸ்கூல்'ல தான் எங்க தாத்தா வாத்தியாரா வேலை பார்த்து இருக்கார். ச்பைசெஸ் டூரிசம் போர்டு கண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்த இடம் தெரிஞ்சதுனால ரோடு பக்காவா போட்டு இருக்காங்கோ. பசங்களோட காம்பிங் போறதுக்கு சரியான இடமும் கூட.


போடியில இருந்து குரங்கணி போற ரோடு தான் மெயின் அட்ராக்ஷன். அங்க அங்க பைக்'ஐ நிறுத்தி போட்டோ எடுத்துக்கோங்கோ. குரங்கணி'ல வண்டிய நிறுத்திட்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடந்தீங்கன்னா, டாப் ஸ்டேஷன்'நு ஒரு எடம் வருமுங்கோ. ஐம்பதுகள்'ல இந்த இடத்தில இருந்து மூனாருக்கு (கேரளா) கேபிள் கார் வசதி இருந்தது. அது மூலமா குரங்கணி சுத்தி உள்ள ஊர்கள்ல வளர்ற ஏலக்காய்'ய அனுப்பிகிட்டு இருந்தாங்க.


அதுக்கு அப்புறம் அது அவ்வளவா லாபகரமா இல்லாததுனால விவசாயிங்க அதை என்னமோ அவ்வளவா உபயோகிக்கல. குரங்கநியில இருந்து ஒரு ரெண்டு கல்லு டாப் ஸ்டேஷனுக்கு பைக்'ல போகலாம். அதுக்கு மேல நடந்து தான் போகணும். மேல ஏறுறதுக்கு முன்னாடி சில பல வடைகள், டீயை உள்ள தள்ளிக்கிட்டு போங்க, இல்லாட்டி பசியில நுரை தள்ளிகிட்டு தான் கீழ இறங்குவீங்க. (அங்க இருக்குற ஒரு கடையில சூடா 'கொழுக்கு மலை' டீ போடுவாங்க).

பெரும்பாலும் மூனார் போயிட்டு வரவங்க வர வழியில இங்க வந்துட்டு போறாங்க. ரெம்பவே சிம்பிள்'ஆன பிக்னிக் ஸ்பாட். ஆனா தங்குற வசதி எல்லாம் கெடயாது. சாப்பாடு சாப்பிடனும்'னா போடிக்கு தான் வரணும். மத்தபடி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பைக் அல்லது கார்'ல ஒரு சவாரி போக பக்காவான இடமுங்கோ.
'
அப்புறம் ஒரு முக்கியமான விஷயமுங்கோ. நீங்க பார்க்குற அம்புட்டு போட்டோவையும் எடுத்தது நாந்தேன்.

நானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்

லைட்டா வெறுப்பா தான் பாஸ் இருக்கு. பின்ன இன்னா கஷ்டப் பட்டு எழுதுனாலும், யாரும் படிக்க மாட்டேன்கிறோங்கோ. ஆனா அதே சமயம் மொக்கை ப்லோக் வர அத்தனை போஸ்டையும் நம்ம மக்கள் படிச்சிட்டு, அதுக்கு கமெண்டும் எழுதுறாய்ங்க. "அயன்" பட விமர்சனம் போட்டீங்கன்னா, சும்மா பிச்சிகினு போகுது ஹிட்டு.

வெறுத்து போய் உக்காந்தப்போ தான் நம்ம மொக்கை மாயாண்டி சொன்னாரு, " மாப்பிள்ளை, மொக்கை போடறதுல தப்பே இல்லை. அவன், அவன் ஆபீஸ்ல பிரஷர் தாங்க மாட்டம்ம தான் பிளோக படிக்க வர்றான். நாம சீரியஸ் மேட்டர் எழுதுனோம்னு வச்சிக்க, அப்பிடியே அப்பீட் ஆகிருவான். அதனால மாப்பிளை, நாலு பேரு சந்தோஷமா இருக்கனும்னா மொக்கை போடறதுல தப்பே இல்லை."

இப்பிடி தலயில சுத்தியலால் அடிச்சு, ஞானோதயம் பண்ணாறு நம்ம மாயாண்டி அண்ணாச்சி. இருந்தாலும் இலக்கியம், உலக சினிமாவை நம்மளால வுட முடியாதேன்னு யோசிச்சேன். சரி வுடு, கொஞ்சம் மொக்கையோட சேர்த்து இதையும் போடுவுமேனு முடிவுக்கு வந்திருக்கேன்.

பி.எச்.டி பண்ணலாம்னு ஆசையோட தான் அமெரிக்காகுள்ள நுழைஞ்சேன். ஆனா இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது, முதுகலை முடிக்கிறதுக்குள்ள முதுகெலும்பு உதிந்திரும்ங்கறது. அதனால டாக்டர் ஆகலம்ன்ற ஆசையை மூட்டை கட்டி வச்சிட்டு, முதுகலையை முடிக்க போறேன்.

பி.எச்.டி காமிக்ஸ்'ன்னு ஒரு வெப்சைட் இருக்குதுங்கோ. (இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் எங்கள் அண்ணன் பிரஷாந்த், பி. எச். டி மாணவர்) ஒரு கிராஜூவேட் மாணவன் தன் பல்கலைகழகத்தில் படும் பாடு தான் மூலக் கரு.
ஒரு சாம்பிள்'க்கு இன்னைக்கு ஒரு படமுங்கோ. அது சரி, யாரு அந்த மொக்கை மாயாண்டி'னு கேக்காதீங்கோ, அது சஸ்பென்ஸ்... :D

பி. கு: கண்ணுங்களா படிச்சிட்டு அப்பீட் ஆவாம, அப்பிடியே கொஞ்சம் பின்னூட்டம் போட்டுகினு போங்க...


Share