Monday, July 27, 2009

யூத்புல் விகடனில் எனது பதிவு - சுனா.பானா உன்னையும் ஊரு நம்புது

முந்தைய பதிவிற்கு மிக நல்ல வரவேற்பு. நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மூலமாக வாழ்த்தினர். பத்தாதிற்கு யூத்புல் விகடன் தனது முகப்பு பக்கத்தில், எனது பதிவை வெளியிட்டுள்ளது. அதற்கான முகவரி இங்கே:


பதிவு எழுத ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நம்மளையும் ஊரு நம்புதுடா சுனா. பானா...

Thursday, July 23, 2009

ஏன் தமிழ் சினிமா இன்னும் உலக இரசிகர்களை சென்று அடையவில்லை?


ஒரு அமெரிக்க நண்பருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது, சினிமாவைப் பற்றி பேச்சு திரும்பியது. அவர் தான் சமீபத்தில் பார்த்த ஒரு ஹிந்தி திரைப்படத்தைப் பற்றி கூறினார். அது இர்ஃபான் கான் நடித்து 2001ல் வெளியான The Warrior என்னும் திரைப்படம். அதை விட இன்னொரு ஆச்சர்யம், அவர் ‘ஹே ராம்’ படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசியது. எப்படி இந்த படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்டேன். அவர் சாதாரணமாக IMDB இணையதளம் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறினார்.

IMDB(Internet Movie Data Base) பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். அமேஸான்(Amazon) குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த தளம். என்ன இருக்கிறது இங்கு? முதல் மெளனப்படம் ஆரம்பித்து சென்ற வாரம் வெளியான ஆங்கிலப் படங்கள், உலகப் படங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு நான் நேற்று பார்த்த ‘Public Enemies' படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் நான் அறிய விரும்பினால், இந்த தளத்தில் தேடினால் உங்களுக்கு தகவல் மழை பொழியும். அதன் இயக்குனர் மைக்கேல் மேனில் ஆரம்பித்து படத்தின் புரொடக்‌ஷன் பாய் வரை அனைவரைப் பற்றிய தகவல்களும் இருக்கும். நிற்க. சரி யார் இந்த தகவல்களை சேர்க்கின்றனர். மிகப் பெரிய பட விநியோக நிறுவனங்களான பாராமவுண்ட், யுனிவெர்சல், ஃபாக்ஸ் பிக்சர்ஸ், வார்னர் ப்ரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்றவை தங்களது படங்களைப் பற்றி அவர்களே தகவல்களை இந்த தரவு தளத்தில் உள்ளீடு செய்வார்கள்.

மற்ற சிறிய படங்கள் பற்றிய தகவல்களை, பார்வையாளர்களும் ரசிகர்களும் உள்ளீடு செய்யலாம். ஆனால் நீங்கள் அந்த படத்தின் புகைப்படங்கள், டிரைலர்களை தரவேற்ற விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் படத்தைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும் தர வேண்டும். உதாரணத்திற்கு படத்தின் இணைய தள முகவரி தரலாம், அல்லது படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியான இணைய இதழ்களின் லிங்குகளைத் தரலாம். பல ஹிந்தி படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளடங்கியுள்ளன. பிரபல ஹிந்தி பட நிறுவனங்களான ஈரோஸ், யு.டி.வி, யாஷ்ராஜ் பிக்சர்ஸ், இந்த இணையதளத்தின் முக்கியத்துவம் அறிந்து தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்கின்றன.

சரி. இதற்கும் தமிழ் சினிமா உலக ரசிகர்களை சென்றடைவதற்கும் என்ன சம்பந்தம்? இந்நேரம் அதை ஊகித்து இருந்தால் உண்மையிலேயே நீங்கள் புத்திசாலி தான்( ஹிஹி). சர்வதேச சந்தைப் படுத்துதலை இந்த தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் டி.வி.டி விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது. டி.வி.டி வாங்க முடியவில்லையா? பரவாயில்லை. டி.வி.டி வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. குறைந்த பட்சம், டாரண்டுகளின் மூலம் டி.வி.டி ரிப்புகளாவது தரவிறக்கப் படுவதற்கு படத்தின் ரேட்டிங்குகள் உபயோகப் படுகின்றன.

கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமான ’சுப்ரமணியாபுரம்’ பற்றிய தகவல்களை இந்த தளத்தில் தேடினால் காணவில்லை. இந்த படத்தைப் பற்றிய தகவல்களை தரவேற்ற முடிந்த மட்டும் ரசிகர்களாகிய நாம் தாம் முயல வேண்டும். தமிழின் மிகப் பெரிய திரைப்பட நிறுவனங்கள், தங்கள் படங்களை இந்த தளம் மூலம் சந்தைப் படுத்தலாம். ’டாக்ஸி ட்ரைவர்’, ‘ரேஜிங் புல்’ போன்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸ், ’இண்டெர்னல் அஃபயர்ஸ்’ என்ற ஹாங்காங் திரைப்ப்டத்தை ரீமேக் செய்து தான் ‘ தி டிபார்டட்’ படத்தை இயக்கினார். இவர்களுக்கு இந்த படத்தைப் பற்றி தெரிய வந்தது IMDB மற்றும் ஆசிய தயாரிப்பார்களின் சந்தைப் படுத்தும் முறைகள்.

தற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ‘ஒல்டு பாய்’ என்ற கொரிய திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்யப் போகிறார். இந்த படங்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தது எவ்வாறு? இந்த தளங்கள் மற்றும் உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக தான். நம்மிடையே எத்தனை தரமான படங்கள் உள்ளன. ஆனால், அவை வெளியில் தெரிய வேண்டாமா? உதாரணத்திற்கு ‘இராம்’ ஒரு மிகச் சிறந்த த்ரில்லர். இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப் பட்டால் எவ்வாறு இருக்கும். இது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் சமன்பாட்டைக் கலைத்த ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றவை உலக இரசிகர்களை சென்றடைவது எப்போது?

இன்றளவும் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்திய சினிமாவைப் பற்றி கேட்டீர்களனால், ”உங்கள் திரைப்படங்கள் மிக அழகாக உள்ளன. பாடல்கள், இசை அற்புதம். அப்புறம் ஏன் உங்களது கதாநாயகர்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா, பறந்து பறந்து சண்டை போடுகிறார்கள்? அப்புறம் ஏன் உங்கள் படங்கள் ஏன் மிக நீளமாக உள்ளன” என்று கேட்கிறார். அவர்கள் கொண்ட பொதுப் புத்தியின் வெளிப்பாடு தான் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அமெரிக்காவில் குவித்த வசூல் மழை.

மணிரத்னம் எப்போதோ உலகத் தரத்தை எட்டி விட்டார். என்ன தான் நாம் ‘காட்ஃபாதரை’ காப்பியடித்து விட்டார் என்று புலம்பினாலும் ‘டைம்’ நாளிதழ் கடந்த நூற்றாண்டின் சிறந்த படமாக ‘நாயகனை’ பட்டியலிட்டு விட்டது. இதே போல் மற்ற தமிழ் படங்கள் பட்டியலிடப் படுவது எப்போது? நான் இறுதியாக சொல்ல வருவது ஒன்று தான். 75 ஆண்டுகள் நிறைவடைந்த நம் தமிழ் படவுலகின் பெருமையை, உலக இரசிகர்களுக்கு சென்றடைய நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். IMDB போன்ற இணைய தளங்களில் நமது தமிழ் திரைப்படங்களைப் பற்றி பதிவு செய்வோம்.

பி.கு: இங்கு பதிவுலகில் நிறைய இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். குறைந்த பட்சம் இந்த தகவல்களை தமிழ்த் தயாரிப்பாளர்கள் வசம் எடுத்துச் சொல்வீர்களனால் அதுவே இந்த பதிவின் வெற்றியாகக் கருதுவேன்.

Wednesday, July 22, 2009

ஓசியில் உலகம் சுற்றுவது எப்படி - நம்ம மேட் மாதிரி யோசிங்க

முதன் முதலில் அந்த வீடியோவைப் பார்த்த போது, என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது. உங்களுக்கும் அது தான் தோன்றும். உலகின் பல்வேறு இடங்களில் நம்ம ‘சாம் ஆண்டர்சன்’ ரேஞ்சுக்கு ஒருவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார். நொடிக்கு நொடி, உலகின் பல்வேறு இடங்களுக்கு காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். யூடியுப் வந்த புதிதில் இந்த வீடியோவைப் பார்க்காதவர்களே இல்லை என்று சொல்லாம். அந்த அளவு இணையப் பிரபலம் ஆகி விட்டிருந்தார் நமது மோசமான டான்ஸர், மேட் ஹார்டிங் (Matt Harding).

18 வயதில் எல்லோரும் போல நம்ம மேட்டுக்கு கல்லூரி செல்ல பிடிக்கவில்லை. ஒரு வீடியோ கேம் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து, பின்னர் ஒரு வீடியோ கேம் பத்திரிக்கையில் எடிட்டராக இணைந்தார். கிடார் ஹீரோ போன்ற பிரபலமான கேம்களை வடிவமைத்த ஆக்டிவிஷன் மேட்டை தங்களது நிறுவனத்தில் கேம் டெவலப்பராக இணைத்துக் கொண்டது. தனது நண்பர்கள் கல்லூரி முடித்து வேலை தேடி கொண்டிருந்த சமயம், மேட் ஆண்டுக்கு 6 இலக்க அமெரிக்க டாலர்களை சம்பளமாக வாங்கி கொண்டிருந்தார். ரெம்ப சீக்கிரமா எல்லாவற்றையும் பார்த்த மேட்டுக்கு வாழ்க்கை போரடித்து விட்டது. தீடீரென்று ஏதோ முடிவெடுத்து தான் பணிபுரிந்த வேலையை விட்டு கிளம்பி விட்டார்.

அவருடன் பணி புரிந்த நண்பர்கள், ஒரு நாள் ‘நாளை ஆஸ்திரேலியா போகிறோம், வருகிறாயா’ என்று அழைக்க, அவர்களுடன் கிளம்பியிருக்கிறார். பயணத்தின் போது ஒரு வரலாற்று சின்னம் எதிரில் வழக்கமாக டூரிஸ்ட்கள் போஸ் கொடுப்பது போல் கொடுக்க, அவரத நண்பர் கடுப்பாகி இருக்கிறார். ”ஏன் எல்லாரையும் போல் போஸ் கொடுக்கிறாய், அது தான் நீ மோசமாக ஆடுவாயே, அது போல ஆடு” என்று சொல்லியிருக்கிறார். அப்போது மேட்டுக்கு தெரியவில்லை, தான் ஆடும் மோசமான ஆட்டம் தன் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடும் என்று.

தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம், அதே போல் மோசமாக டான்ஸ் ஆடி அதையெல்லாம் தொகுத்து ஒரு வீடியோவாக யூடியுபில் போட, ஒரே இரவில் இண்டெர்னெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார் மேட். தனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் அஞ்சல்கள் வந்ததாக சொல்லும் மேட், ஒவ்வொன்றிலும் மக்கள் தங்கள் ஊருக்கு வருகை தருமாறு மேட்டிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். வேலையும் இல்லாமல், காசும் இல்லாமல் என்ன செய்வது என்று யோசித்த மேட்டுக்கு Stride என்னும் சூயிங் கம் கம்பெனி கை கொடுத்தது. பிறகு என்ன, தனது பேக்கை மாட்டி கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்தார் மேட்.

தான் சென்ற இடங்களிலே தனக்கு மிகவும் பிடித்த இடமாக நியூ கினியை (New Guinea) குறிப்பிடுகிறார் மேட். அங்குள்ள பழங்குடி மக்களுடன் அவர் ஆடிய நடனத்தை தன்னால் மறக்க முடியாது என்று சொல்கிறார். சென்ற ஆண்டு அவர் சுற்றிய நாடுகளின் தொகுப்பு அடங்கிய வீடியோ இதோ:
இன்னும் வேற வேற இடங்களுக்கு சென்று இதே போல் ‘டான்ஸ்’ ஆட மேட்டை வாழ்த்துவோம்.Thursday, July 2, 2009

In Bruges (2008) - குற்ற உணர்வும், இருத்தலின் வலியும்


ஃப்ரான்ஸ் காப்காவின் இரு சிறந்த சிறுகதைகளில் ஒன்று, In the Penal Colony. ஒரு கொலை இயந்திரம் பற்றி, மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகவும் துல்லியமாக விவரிக்கப் பட்ட சிறுகதை. 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த இருத்தலியல் (Existentialism) படைப்பாக இந்த சிறுகதை அறியப் படுகிறது. என்னவோ தெரியவில்லை, இந்த திரைப்படத்தை பார்க்கும் போது, இந்த சிறுகதை என் நினைவுக்கு வரத் தவறவில்லை.

லண்டனில் வசிக்கும் இரு ஐரிஷ் அடியாட்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் தவறு செய்ய நேரிட, அதில் இருந்து தப்பிப்பதற்காக பெல்ஜியத்தில் உள்ள புருஷிற்கு(Bruges) தங்களை வேலைக்கு அமர்த்தியவரால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவனுக்கு அங்கு வேலை காத்திருக்கிறது. இவர்கள் இருவரும் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான ப்ரச்சனைகளும், அவர்களில் ஒருவன் தான் செய்த தவறினால் ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயல்வதும் தான், இந்த திரைப்படத்தின் கதை. டார்க் ஹீயுமர் என்று ஒரு வகை உண்டு. அதை மிகச் சிறப்பாக இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

காலின் ஃபெரல் (Collin Ferrel) Phone Booth, Minority Report, Alexander போன்ற படங்களில் நடித்தவர். ப்ரெண்டன் க்ளீஸன் (Brendon Gleeson) Braveheart, Kingdom Of Heaven, Harry Potter திரைப்படங்களில் நடித்தவர். இவர்கள் இருவருமே அயர்லாந்தை சேர்ந்தவர்கள். அதனால் தான் என்னவோ, ஐரிஷ் அடியாட்களாகவே பொருந்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்துபவராக ரால்ஃப் பியன்னஸ் (Ralph Fiennes), The English Patient, The Constant Gardner மற்றும் The Reader போன்ற படங்களில் நடித்தவர். மூவரும் இப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளனர்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, கதாப்பாத்திர அமைப்புகள். தயாரிப்பு மேற்பார்வையாளர் போர்வையில் உலவும் போதை மருந்து விற்பவள், இவளுடன் சேர்ந்து சுற்றுலா பயணிகளை கொள்ளையடிக்கும் அவளின் முன்னாள் காதலன், கர்ப்பமாக இருக்கும் ஹோட்டல் வரவேற்பறை பெண், நிறவெறி பிடித்த குள்ள அமெரிக்க நடிகர் என்று வித்தியாசமான கதாபாத்திர அமைப்புகள். புரூஷ், ஐரோப்பிய நகரங்களிலே மிகவும் பழமையான நகரம், அதை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் Eigil Bryld.

முழுதாக கதையை சொல்லி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், இந்த பகுதியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். காரணம், இது தான் இந்த படத்தின் ஆதாரம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் எதற்காக புருஷ் வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. ஒரு பாதிரியாரை கொல்லுகையில் காலின் ஃபெரல், ஒரு சிறுவனை தவறுதலாக கொலை செய்து விடுகிறார். அதனால் அவர் கொள்ளும் குற்ற உணர்வும், தன் உயிரை மாய்த்து கொள்ள துணிவதும், இந்த உலகில் தான் ஏன் இருக்க வேண்டும் என்று தனக்குள விவாதிப்பதும் ஒரு சிறந்த இலக்கிய படைப்பை வாசிப்பது போன்ற உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்த தவறாது. இதனால் தான் இந்த திரைப்படத்தை ப்ரான்ஸ் காஃப்காவின் படைப்போடு ஒப்பிடுகிறேன்.

படத்தின் இயக்குநர் மார்டின் மெக்டோனா (Martin McDonagh) இந்த படத்திற்காக, சிறந்த திரைக்கதை பிரிவில், ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘மில்க்’ தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனால், காலின் ஃபெரல் இந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இந்த படத்தைப் பார்த்த பின் உங்களுக்கு ஒரு முறையாவது புருஷிற்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாகத் தோன்றும். இந்த படத்தின் டயலாக்குகள் சோகமான தருணங்களிலும் உங்களை சிரிக்க வைக்கத் தவறாது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:

Overweight Man: Been to the top of the tower?
Ray:(Collin Ferrel) Yeah... yeah, it's rubbish.
Overweight Man: It is? The guide book says it's a must see.
Ray: Well you lot ain't going up there.
Overweight Man: Pardon me? Why?
Ray: I mean, it's all winding stairs. I'm not being funny.
Overweight Man: What exactly are you trying to say?
Ray: What exactly am I trying to say? You's a bunch of fuckin' elephants.
[overweight man attempts to chase Ray around but quickly grows tired]
Ray: Come on, leave it fatty!
[the overweight women calm down the overweight man]
Overweight Woman #2: [to Ray] You know you're just the rudest man. The rudest man!
Ken:(Brendon Gleeson) [coming back from the tower] What's all that about?
[Ray shrugs]
Ken: They're not going up there.
[to overweight family]
Ken: Hey, guys. I wouldn't go up there. It's really narrow.
Overweight Woman #2: Screw you, motherfucker!
Ken: [to Ray] What was that about?


இண்டிபெண்டண்ட் வகைத் திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் In Bruges. Guy Ritchie'ன் Lock, Stock and Two Smoking Barrels படத்தை ரசித்தீர்களானால் இந்த படம் உங்களுக்கு ஒரு திரைக் காவியமாகத் தோன்றும்.
இந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக:


நண்பர்களே, நண்பிகளே. பதிவைப் படிச்சுட்டு அப்படியே போயிராதீங்க.
தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10ன்னு உங்களுக்கு எது இலகுவா இருக்கோ,
அதுல ஓட்டு போடுங்க. மறக்காம பின்னூட்டம் போடுங்க. அடுத்த பதிவு எழுத
என்ன மாதிரி புதிய பதிவர்களுக்கு உபயோகப்படும். நன்றி.

Wednesday, July 1, 2009

திரு.நம்மாழ்வார் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமைகள்


அது 2001ஆம் ஆண்டு.உயிரி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வக் கோளாறில் அலைந்து கொண்டிருந்த +1 மாணவன் நான். இணையம் எல்லாம் என் ஊரில் அந்த அளவுக்கு வரலை. பேரு தான் மாவட்டத் தலைநகரம் (தேனி). என்னோட ஆ.கோவிற்கு தீனிப் போட்டது மாவட்டத் தலைமை நூலகம். அதுக்கு கூட, நான் இருந்த பழனிசெட்டிபட்டியிலிருந்து 4 கீ.மி சைக்கிள் மிதிச்சு போகனும். கலைக்கதிர், நேஷனல் ஜியாக்ரபிக், ந்யூ சயிண்டிஸ்ட் எல்லாம் என்னோட பயோடெக்னாலஜி ஆர்வ அரிப்புக்கு தீனி போட்டன. அப்போது தான் குமுதம் இதழில் ஒரு தொடர் வந்தது. யாரோ நம்மாழ்வார் என்பவர் எழுதியிருந்தார். நம் நாட்டில் இனிமேல் ஏன் பருவ மழை பெய்யாது, என்பதை அவர் விவரித்து எழுதியிருந்த போது, எனக்கு ஏதோ திகில் கதை படித்த உணர்வு. பத்தாதிற்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருந்தார்.

என்னடா இது தேனிக்காரனுக்கு வந்த சோதனை, என்று அவர் தொடர் முழுமையும் படிக்க ஆரம்பித்தேன். ஏன் நமது நாட்டில் இன்னொரு பசுமை புரட்சி வரவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை விவரித்து இருந்தார். மேலும் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது, அவர் ஒரு வேளாண் பட்டதாரி என்பதும், பசுமைப் புரட்சி கொண்டு வந்த உரக்கலப்பு விவசாயத்தில் நம்பிக்கை இழந்து, இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபாடு கொண்டதையும் வேளாண் பட்டதாரியான என் தந்தையிடம் இருந்து அறிந்து கொண்டேன். அதற்காக தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை உதறி விட்டு, இயற்கை வழி விவசாயத்திற்கு என தனியொரு அமைப்பான ‘களக்காட்டி’ல் இணைந்தார்.

இது வரை பல என்.ஜீ.ஓ அமைப்புகளை நிறுவியுள்ளார். மேலும் சமீபத்தில் சுவாமி ‘ஜக்கி வாசுதேவுடன்’ இணைந்து ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதிலும் துணை புரிந்து இருக்கிறார். ’பஞ்சகவ்யம்’ - பசுவின் படைப்புகளான பால், தயிர், மோர், சானம், கோமியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அருமையான உரம். பஞ்சகவ்யத்தின் உபயோகத்தை தான் செல்லும் விவசாயக் கூட்டங்களில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார் திரு.நம்மாழ்வார். இவர் கூறிய படி பஞ்சகவ்யத்தை எனது மாமா இன்று வரை தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயரிட்டு மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறார். இதில் மேலும் ஒரு அழகு என்னவென்றால், பஞ்சகவ்யத்தை தொடர்ந்து பயன் படுத்தியதால் அவரின் நிலத்திற்கு இரசாயண கலப்பு உரம் உபயோகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது.

மத்தியில் உள்ள வேளாண் அமைச்சர்கள், பூச்சி மருந்து நிறுவனங்களின் நைச்சிய பேச்சிலும், பணத்திலும் நம்பி, இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்று பிதற்றி வருகின்றனர். இன்னொரு பசுமைப் புரட்சி வந்தால் விவசாயியின் விளைச்சல் பணம் பூச்சி மருந்து வாங்கவே பத்தாது. விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு வீட்டு மனைகள் உருவெடுக்கும் இந்த நிலையில், அரசு இவரைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளை பயன் படுத்தி குறைந்த பட்சம் இயற்கை உரங்களின் மகத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கலாம். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் கால் பதிந்து இருக்க, சிறு விவசாயியின் நிலைமையை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. நம்மாழ்வரைப் போன்றவர்கள் தான் அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அமைய முடியும்.

இயற்கையைப் பற்றியும், நாம் இப்போது இயற்கையை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும் விளக்கியுள்ளார்:

இந்த வீடியோவைப் பதிவேற்றிய நண்பர் தீனதயாளன் சிவத்திற்கும், புகைப்படம் தந்து உதவிய நண்பர் கடற்கரய் அவர்களுக்கும் மிக்க நன்றி. கடற்கரய் அவர்கள் நம்மாழ்வரிடம் ஒரு வருடம் முன்பு ’தீராநதி’க்காக எடுத்த பேட்டிக்கு இங்கே செல்லவும்.

நான் நான்கு வருடம் திருச்சியில் படித்தாலும், இவர் திருவானைக்காவலில் தான் இருக்கிறார் என்று சமீபத்தில் தான் தெரிய வந்தது. இன்றளவும் நான் சந்தித்து
உரையாட விரும்பும் மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் திரு.நம்மாழ்வார்.

Share