Friday, August 21, 2009

Inglourious Bastards [2009] - இரத்தமும், சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம்


இன்னாடா இது? தலைப்புலியே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குதேனு, கொஞ்சம் உஷாராகத் தான் தியேட்டருக்கு போனேன். படம் போட்ட பிறகு தான் தெரிந்தது, அதற்கான காரணம். வரலாறு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்தது இந்த படம். முக்கியமாக ஒன்னு. நீங்கள் ஒரு Pulp Fiction அல்லது Reservoir Dogs - ஐ இந்த படத்தில் எதிர் பார்க்க முடியாது. அதனால் தான் என்னவோ, பெரும்பாலான விமர்சகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. இந்த படத்திற்கும், இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை. ஒரு வரலாற்று திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றீர்கள் ஆனால், தயவு செய்து இந்த படம் போட்ட த்யேட்டர் பக்கம் கூட போக வேண்டாம்.

சரி கதை என்ன?
கதை ரெம்ப, ரெம்ப சின்ன கதைங்கோ. மெயின் திரைக்கதை சரடு என்னான்னா, இப்படி வரலாற்றில் நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான். ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டு இருக்கும் ப்ரான்ஸில், யூத அமெரிக்க இராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு, நாஜிக்களை கொன்று குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றனர். அதுவும் சாதாரணமாக கொல்வதல்ல அவர்களின் குறிக்கோள். ஒவ்வொரு நாஜியையும், அவர்களது மேல்தலையை(முடியோடு சேர்ந்த மேல் தலை. புரியாவிடின் கில்பில் வால்யூம் 1ஐப் பார்க்கவும்) கொய்து எடுக்க வேண்டும். அவர்களின் தலைவன் லெஃப்டினண்ட் ஆல்டோ ரைன் (Brad Pitt). அவனுக்கு துணையாக ‘The Bear Jew' என்றழைக்கப்டும் சார்ஜண்ட் டான்னி (Eli Roth) மற்றும் ஒரு எட்டு வீரர்கள். இவர்களுக்கு இடையில் இரத்த வெறி அடங்காது, ப்ரான்ஸிலும் யூதர்களை கொன்று குவிக்கும் கலோனல். ஹான்ஸ் லாண்டா (Christoph Waltz). திரைப்படத்தின் ஆரம்பத்தில், லாண்டாவால் தனது குடும்பமே கொலை செய்யப்பட்டு, அவனை பழி வாங்கத் துடிக்கும் ஷோசன்னா (Melanie Laurent). ஜெர்மனிய நடிகையாகவும், அமெரிக்க உளவாளியாகவும் செயல்படும் ப்ரிட்ஜெட் (Diane Kruger - செம பிகரு மாமே). இப்படி ஒரு சிக்கலான கதாப்பாத்திர அமைப்புகளுக்கிடையே பயணிக்கிறது திரைக்கதை.

படத்தின் டைட்டில் காட்சிகள் 70களில் வெளியான பல இரண்டாம் தர, வெஸ்டர்ன் மற்றும் ஆக்ஸன் திரைப்படங்களை நினைவூட்டுகிறது. அதற்கு வலு சேர்ப்பது போல, படத்தின் ஆரம்ப காட்சி ஒரு ஸ்பாகெட்டி வெஸ்டர்னின் ஆரம்பத்தையே நினைவூட்டுகிறது. முக்கியமாக படத்தின் துவக்க ப்ரேம், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘Unforgiven'ஐ நினைவு படுத்த தவறவில்லை. ஐந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் கதை (இயக்குனர் முத்திரை :D), இரண்டரை மணி நேரமாக நீண்டு இருந்தாலும் போனதே தெரியவில்லை. அப்படி ஒரு வேகம். இத்தனைக்கும், படத்தின் நடுவில் சட்டென்று ஒரு ட்ராமா வகைத் திரைப்படத்தைப் பார்க்கிறோமோ என்று தோன்றினாலும், சட்டென்று ஆக்‌ஷன் ட்ராக்கில் மாறி பயணிக்கிறது. 'Valkyrie' என்ற ஒரு Tom Cruise படம் ஒன்றைப் பார்த்தேன். இதுவும் ஹிட்லரை கொல்லும் முயற்சி பற்றிய படம் தான். ஆனாலும் படம் ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அதுக்கெல்லாம் இந்த படம் ஆயிரம் மடங்கு தேவலாம்.

என்ன புதுசு?
என்ன?? இது வரைக்கும் க்வண்டின் டொரண்டினோ படம் பார்த்தில்லையா நீங்க. அனேகமாக பார்க்காம இருந்திருக்க மாட்டீங்க. படத்துல எல்லாமே பழசு தான். ஆனாலும் புதுசு. (இன்னா சொல்ல வர்ற? ஆட்டோ அனுப்பனுமா?). அப்புறம் ஸ்டைல் மாமே. சும்மா சூப்பர் ஸ்டார் மாதிரி நட்சித்திரங்கள், போரடிக்காம குத்து வசனம் (பஞ்ச் டயலாக்) பேசுறாங்க. உங்களால் வன்முறைக் காட்சிகளை சகிக்க முடியவில்லை எனில் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம். கில் பில் அளவிற்கு இதில் வன்முறை இல்லை எனினும், ஒரு சில காட்சிகள் உவ்வே ரகம் தான். ஒரு காட்சியில் குண்டடி பட்டு கிடக்கும் டயான் க்ருகரை விசாரிப்பதற்காக ப்ராட் பிட், அந்த குண்டடி பட்ட இடத்திலேயே, விரலை வைத்து நோண்டுவார். பத்தாதற்கு இதில் க்ளோசப் வேறு. இந்த காட்சியின் போது த்யேட்டரை விட்டு ஒரு நாலு பேரு எழுந்து போனாங்கோ.

”The Dirty Dozen" என்ற படத்தை பெரும்பாலும் தழுவியே இந்த படத்தை எடுத்து இருக்கிறார் குவெண்டின். பல இரண்டாம் உலகப் போர் திரைப்படங்களையும் நினைவு படுத்த தவறவில்லை. ப்ராட் பிட் நன்றாகவே காமெடியிலும் கலக்கியிருக்கிறார். டென்னஸி ஆக்ஸண்டில் அவர் இத்தாலியன் பேசும் போது அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. ஆனாலும், படத்தில் ப்ராட் பிட்டை நடிப்பில் தூக்கி சாப்பிடுவது படத்தின் வில்லன் கிறிஸ்டோப் வால்ட்ஸ் தான். மனிதர் ஆரம்பத்தில் பார்க்க காமெடியன் போல் இருந்தாலும், படத்தின் ஆரம்ப அத்தியாயத்தில், ப்ரெஞ்சு விவசாயியை விசாரிக்கும் காட்சியில் மெதுவாக முதுகை சில்லிட வைக்கிறார். படத்தின் பிண்ணனி இசை பெரும்பாலும் Ennio Morricone இசையமைத்த வெஸ்டர்ன் படங்களில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளது. அதனால் தான் என்னவோ படம் முழுக்க ஒரு வெஸ்டர்ன் திரைப்படத்தைப் பார்ப்பது போல தோன்றியது.

படத்தில் சில நீளமான காட்சிகள். முக்கியமாக ஒரு பாரில் நடக்கும் உரையாடல் 20 நிமிடத்திற்கு மேல் நீள்கிறது. ஆனால் அதையும் சுவாரசியமாக எடுத்து சொல்ல குவெண்டினால் மட்டுமே முடியும். சீரியசான காட்சிகளில் எல்லாம் சிரிப்பு வருது. முக்கியமாக, Eli Roth ஜெர்மன் இராணுவ அதிகாரியை தனது பேஸ்பால் மட்டையால் அடித்து மூளையைப் பிளக்கும் போது, அரங்கம் ஒரு திகிலோடு சிரித்து கொண்டு தான் இருந்தது. அப்புறம் படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரத்தை பற்றி சொல்ல மறந்து விட்டேன். அது செர்ஜண்ட் ஹ்யூகோ(Til Schweiger). நம்ம ஆளு இண்ட்ரொடக்‌ஷன் போட்டப்போ, த்யேட்டரில் சிரிக்காதவர்கள் யாருமே இல்லை.

பாஸ்டர்ட்கள் உயிரோடு விடும் ஒவ்வொரு நாஜிக்களின் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை இடுவார்கள். அதே போல் படத்தின் இறுதியில் (அய்யய்யோ க்ளைமாக்ஸை சொல்லாத!!) ப்ராட் பிட், கிறிஸ்டோப் வால்ட்ஸ் நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னத்தை கத்தியால் கிழித்த பின் (கீறல் இல்லை, கிளித்தல். இதிலும் க்ளோசப்) ஆடியன்ஸிடம் “Thhis ees gonna bee my masterpiece" என்று சொல்வதோடு படம் முடியும். இது குவெண்டினின் மாஸ்டர் பீஸ் இல்லாவிடினும் ஒரு திருப்தியான, அலுக்காத மசாலாப் படம் பார்த்த பின் என்ன திருப்தி ஏற்படுமோ, இந்த படத்தைப் பார்த்த பின்னும் உங்களுக்கு தோன்றும். மேலே சொன்னதைப் போல் Inglourious Bastards, இரத்தமும் சதையும் கலந்து செய்த காமிக்ஸ் புத்தகம். இன்னொரு தபா எப்ப பார்க்க போறேன்னு தெரியலை...


Monday, August 17, 2009

பி.பி.சி தமிழோசையும், நானும்


அது என்னமோ தெரியவில்லை. சிறு வயதில் அப்பா ரேடியோ கேக்கும் போது எனக்கு அத்தனை கோபம் வரும். காலையில் ஆரம்பிக்கும் நாராசம் பள்ளி கிளம்பும் வரை தொடர்ந்து, பின்னர் மாலை தொடங்கி இரவு 9:45க்கு முடியும். அம்மா கூட சில சமயங்களில் கடுப்பாவது உண்டு. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வானொலி கேட்பது என்பது அனிச்சை செயலாகிப் போனது. வானொலி இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக பி.பி.சி தமிழோசை. இந்திய நேரப்படி இரவு 9:15 தொடங்கி, 9:45க்கு முடியும். ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் கொடுக்கும் தொகுப்பை, இன்றைய 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் தர முடியாது.

மே 3 1941-இல் தொடங்கிய தமிழோசை, முதலில் வாரம் ஒரு முறை நிகழ்ச்சியாகத் தான் தொடங்க பட்டது. பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என்றாகி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக உருப்பெற்றது (நன்றி: பி.பி.சி தமிழ் இணையதளம்) நினைவு தெரிந்த நாளிலிருந்து, பி.பி.சி தமிழோசை கேட்டு கொண்டிருந்தேன் (கல்லூரி செல்லும் வரை). எத்தனை உபயோகமான சங்கதிகள். பொதுவாக மூன்றாக பிரித்து விடுவார்கள். செய்தி அறிக்கை, செய்தி அரங்கம், மற்றும் சிறப்பு செய்திகள். இவற்றுக்குள் உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் அத்தனையும் அடக்கி விடுவார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் அழகான மங்கள இசை. அனேகமாக காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களுடையதாக இருக்கலாம்.

என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘அறிவியல் ஆயிரம்’. அப்போது நான் 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். மரங்களின் வயதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று அவர்கள் விவரித்தது இன்றளவும் பசு மரத்தாணி போல் மனதில் உள்ளது. அது மட்டுமல்லாது இரும்பு பாத்திரங்கள் அதிகம் உபயோகித்தால் உணவில் இரும்பு சத்து கூடும் என்று அவர்கள் சொல்லித் தான் தெரிந்தது. இணையம் என்றால் என்ன என்று தெரியாத, ஆங்கிலத்தில் ஒரு பத்தியை ஒன்பது மணி நேரம் படிக்கும், ஒரு சாதாரண தமிழக கிராமச் சிறுவனுக்கு இதை விட, என்ன ஒரு தகவல் களஞ்சியம் இருக்க முடியும்.

மேலும் ’தகவல் அரங்கம்’ என்று ஒரு நிகழ்ச்சி இருந்ததாகக் கூட நினைவு. இன்று வரை என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ‘பாட்டொன்று கேட்டேன்’. 75 பாகங்கள் வந்த இந்த நிகழ்ச்சியை தற்செயலாக கேட்க ஆரம்பிக்க, ஒவ்வொரு வாரமும் கேட்க ஆரம்பித்தேன். பத்திரிக்கையாளர் ‘சம்பத்குமார்’ தனது கனீர் குரலில் அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் 10 நிமிடத்திற்காக ஒரு வாரம் முழுவதும் தவம் கிடந்தேன். திரைப்பட வரலாறுகள் மிகவும் சுவாரசியமானவை. திரைப்படங்கள் மூலமாக அன்றைய சமூக நோக்குகள், ரசிக பார்வைகள் அவற்றை அறிந்து கொள்வதில் எனக்கு அலாதிப் பிரியம். அதையும் பாடல்கள் வழியாகத் தெரிந்து கொள்வது, நாயர் கடை டீயில், டபுள் மலாய் போட்டு குடிப்பது போல.

ஆனால் ஏனோ ஒரு கட்டத்திற்கு மேல் என்னாலும் சரி, அப்பாவாலும் சரி, அவ்வளவாக கேட்க முடியவில்லை. முக்கியமாக நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த பின். மற்றுமொரு காரணம் - இலங்கைச் செய்திகள். (இலங்கை நண்பர்கள் பொறுத்தருள வேண்டும். இது தமிழோசையைப் பற்றிய எனது பொதுப் பார்வை மட்டுமே). காரணம் செய்தி அறிக்கை, செய்தி அரங்கம் மட்டுமல்லாது தனியாக இலங்கை கண்ணோட்டம் என்றும் ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் வாழும் இலங்கை நண்பர் ஒருவர், தங்களுக்கு இது எத்தனை உபயோகமாக இருந்தது என்று அவர் கூறக் கேட்டிருக்கிறேன். இருப்பினும், ஏனோ தமிழோசை அதன் பழைய ஒளி(லி)யை இழந்ததாகவே எனக்குத் தோன்றியது. அப்பாவும் அதேயே தான் தெரிவித்தார்.

தமிழோசை தற்போது இணையத்திலும் இருக்கிறது. இணையம் வந்த பின் சிறப்பு நிகழ்ச்சிகளான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற நிகழ்ச்சிகளையும் கேட்கத் தொடங்கினேன். ஆம். பி.பி.சி இணையத்திலும் இருக்கிறது. தினமும் தமிழோசையைக் கேட்க இங்கு சொடுக்குங்கள். அது மட்டுமல்லாது, ’பாட்டொன்று கேட்டேன்’ நிகழ்ச்சியின் 75 பாகங்களும் உள்ளன. தினமும் இந்திய நேரப்படி நிகழ்ச்சி தொடங்கும் முன், முந்தைய நாள் நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். ‘நினைவில் நின்றவை’ என்னும் பகுதியில் அவர்கள் தொகுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளன. அவற்றில் என்னைக் கவர்ந்ததும், நீண்ட சோகத்தில் ஆழ்த்தியதுமான, சுஜாதா அவர்களின் இறப்புக்கு பின்னர் அவர்கள் தொகுத்த செய்தி. இது பி.பி.சி இணைய தளத்தில் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் யூடியுபில் கிடைத்தது. இதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பி.பி.சி வானொலியில், சிற்றலையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பண்பலை(எப்.எம்) வானொலி யுகத்தில் வெகு சிலரே சிற்றலை கேட்கிறார்கள். சிற்றலையிலும் சிறந்த வானொலிகள் உள்ளன. ஒரு மாறுதலுக்கு கேட்டு பாருங்களேன். மேலும் இலங்கை பதிவர்கள், பி.பி.சி தமிழோசைப் பற்றிய உங்களின் கருத்துகளை பின்னூட்டம் இடுங்களேன். தமிழிஸிலும், தமிழ்மணத்திலும் ஓட்டு போட்டு உங்களின் நண்பர்களுக்கும் தமிழோசைப் பற்றி தெரியப் படுத்துங்களேன்.


Monday, August 10, 2009

Kundun [1997] - மார்டின் ஸ்கார்ஸிசின் மட்டுப்படுத்தப் பட்ட படைப்பு


இந்த திரைப்படத்தைப் பற்றி மிகச் சமீபத்தில் தான் கேள்விப் பட்டேன். பான் நளின் என்பவரின் ‘சம்சாரா’ என்ற திரைப்படத்தைப் பற்றி தகவல் தேடிய போது தான் இந்த படத்தைப் பற்றி தகவல் தெரிந்தது. இயக்குனர் யார் என்று பார்த்தால் மார்டின் ஸ்கார்ஸிஸ். அவரின் சுமாரான படைப்பான ‘நியூயார்க், நியூயார்க்’ கூட டி.வி.டியில் தேட கிடைத்தது. இந்த திரைப்படம் கிடைக்கவில்லை. அப்புறம் இந்த படத்தைப் பற்றி ஆராயும் போது தான், இந்தப் படம் திட்டமிட்டே முடக்கப் பட்டிருக்கிறது என்று தெரிந்தது. அதை இறுதியில் சொல்கிறேன்.


படத்தைப் பற்றி:

ஒரு வரியில் சொல்லி விடக் கூடிய மிக அழகான திரைக்கதை. தலாய்லாமாவின் சிறு பிராயம் தொடங்கி, அவர் இந்தியா தப்பித்து வரும் வரை தொடரும் திரைக்கதை. அதை மிகத் தெளிவாக படமாக்கியிருக்கிறார் ஸ்கார்ஸிஸ். பொதுவாக வரலாற்றுப் படங்களில் அவ்வளவாக சுவாரசியமான திரைக்கதையை எதிர்ப் பார்க்க முடியாது. ஆனால் இந்த படத்தில் பக்கா ஸ்பீடில் போகிறது திரைக்கதை. படத்தின் திரைக்கதை எழுதிய மெலிஸா மேத்திஸன், தலாய்லாமாவிடம் நேரடியாக பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சீனா, எப்படி திபெத்தை ஆக்குவித்தது. மாவோவின் அரசியல் கொள்கை எப்படி திபெத்தில் இருந்து அமைதியாக மத அடையாளங்களையும், திபெத்தின் கலாசார அடையாளங்களையும் அழிக்க ஆரம்பித்தது என்பதை மிகத் தெளிவாக காட்டி இருந்தனர்.

இந்த படத்தைப் பார்ப்பதற்காக உங்களுக்கு திபெத்தின் வரலாறு தெரிய தேவை இல்லை. மாறாக ஒரு சிறு திபெத்திய வரலாற்றை, தலாய்லாமாவின் கதையின் பிண்ணனியில் படைத்து இருந்தனர். இருப்பினும் பல வரலாற்று நெருடல்கள். உதாரணத்திற்கு திபெத்தின் இந்தியாவுடனான உறவு ஆரம்பத்தில் அத்தனை சீராக இல்லை. வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாய் தலாய்லாமா இந்தியா வந்த பின், இந்தியா சீனாவுடனான உறவு அதல பாதாளத்திற்கு போனது. ஆனால் திரைப்படம் தலாய்லாமா இந்தியா வருவதுடன் நிறைவடைவதால் இதைப் பற்றி சொல்லவும் வாய்ப்புகள் இல்லை.

மிகச் சிறப்பான வசனங்கள்:

தலாய்லாமாவிடம் பேச வரும் சீன இராணுவ அதிகாரி: “நாங்கள் உங்கள் நாட்டை விடுதலை செய்யவே ஆக்ரமித்து உள்ளோம்”, அதற்கு தலாய்லாமா “நீங்கள் என்னை விடுவிக்க தேவை இல்லை, நாங்களே எங்களை விடுவித்து கொள்வோம்” என்று கூறும் இடத்தில் தலாய்லாமாவின் மெளனப் புரட்சியை சாமர்த்தியமாக வெளிப் படுத்துவார் இயக்குனர். மாவோவை சந்திக்க சீனா வரும் தலாய்லாமாவிடம், மாவோ “மதம் ஒரு விஷம் போன்றது” என்று நாசூக்காக தெரிவிக்கும் காட்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறையும் தலாய்லாமா, இனி சீனா திபெத்தை விட்டு விலகாது என்று உணர்கிறார்.

திரைப்பட அரசியல்:

இந்த படம் வெளி வருவதற்கு முன்பே, இதற்கு தடை விதித்தது சீன அரசு. மேலும் திரைப்படத்தின் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸிஸ், எழுத்தாளர் மெலிசா மேத்திஸன், அவரின் கணவர் ஹாரிசன் ஃபோர்டு ஆகிய 25 பேரை சீனாவுக்குள் நுழைய தடை விதித்து உள்ளது. அந்த தடை இன்னும் நீக்கப் படவில்லை. படத்தை தயாரித்த ‘டச்ஸ்டோன் பிக்சர்ஸி’ன் தாய் நிறுவனமான டிஸ்னி பிக்சர்ஸின் வர்த்தகத்தை சீனாவில் முடக்கி விடுவோம் என்று பகிரங்கமாக அறிவித்தது சீன அரசு. இதனாலேயே அமெரிக்க வெளீயிட்டில் கூட மிகக் குறைந்த தியேட்டர்களிலே படம் வெளியிடப் பட்டது. ஆஸ்கர் விருதுகளில் கூட எங்கே சீனா நம்மை புறக்கணித்து விடுமோ என்று, ஒரு விருது கூட தரப் படவில்லை. குறைந்த பட்சம் ஒளிப்பதிவிற்காக தந்திருக்கலாம்.

படத்தின் இறுதியில் இந்தியா வரும் தலாய்லாமா, “நான் ஒரு நல்ல பயணத்தை என் மனக் கண்ணில் காணுகிறேன். அதே போல் நல்ல ஒரு திரும்புதல் (திபெத்திற்கு) பயணத்தையும் காணுகிறேன்” என்பார். ஆனால், அந்த திரும்புதல் பயணம் உண்மையாகுமா என்பதிற்கு காலம் தான் பதில் சொல்லும்.

சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதையும்’ கல்கியின் சரித்திர நாவல்களும்
STD - ன்னா வரலாறு தானே என்று திரிந்து கிடந்த எனக்கு சரித்திரத்தில் கொஞ்சமாவது பிடிப்பு ஏற்படுத்தியவை கல்கியின் நாவல்களே. ’பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ’பொன்னியின் செல்வன்’ மூன்றுமே தமிழின் ஆகச் சிறந்த படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், கல்கியின் பாத்திர படைப்புகள் பெரும்பாலும் கொட்டாவி விடவே வைத்தன. கல்கியின் பாத்திரங்கள் ஒன்று ரெம்ப நல்லவர்களாக இருப்பார்கள், அல்லது ’தவசி’ பாசையில் ரெம்ப ரெம்ப கெட்டவர்களாக இருப்பார்கள். ‘பார்த்திபன் கனவு’ என்னைப் பொறுத்த மட்டில் அவரின் மிகச் சிறந்த முழுமையான படைப்பு. அதற்கு பிறகு ‘சிவகாமியின் சபதம்’, அதற்கு அடுத்த வரிசையில் தான் எல்லோராலும் கொண்டாடப் படும் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பாத்திரங்களின் அளவுக்கு அதிகமான ரொமாண்டிஸிஸம், என்னை பல சமயங்களில் தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இது அனைத்தும் எனது கருத்தே.


சரி சரி மேட்டருக்கு வரேன் மாமே. இப்ப தான் சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை’யைப் படித்து முடித்தேன். (அவரின் முதலாவது சரித்திர நாவல் ‘இரத்தம் ஒரே நிறம் - முதலாம் சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தார்). கதை வழக்கம் போல் சோழப் பேரரசின் காலத்தில் நடக்கும் கதை. ஆனால் கதை நாயகன் நம்ம வசந்த குமாரன். அவனுக்கு குரு போல் இருந்து செயல் படுபவர் கணேச பட்டர். இந்த பேரை எல்லாம் எங்கே கேட்டது போல் இருக்குதா. ஆமாம் பாஸீ. கணேஷ், வசந்த் ஒரு சரித்திர நாவலில். ஷப்பா!! இன்னாமா யோசிச்சு இருக்காருப்பா சுஜாதா. சத்தியமாக மேலே சொன்ன வரிகளை எழுதும் முன் இந்த பாத்திரப் படைப்பை நான் உணரவில்லை.

நம்ம வசந்தகுமாரன் வழக்கம் போல் பெண் பித்தன். சூதாடுபவன். நம்மாளு சிக்கல்ல மாட்டும் போதெல்லாம் நம்ம கணேச பட்டர் தான் காப்பத்துறாரு. கணேச பட்டர் பிரம்மதேய பணியில் இருப்பவர் (லாயர் மாமே). யவன தேசத்தில் (க்ரீஸ்) இருந்து வரும் ஒரு குதிரை வணிகனிடம், குதிரைகளை வாங்குவதற்காக பேரம் பேசும் வசந்தகுமாரன், அவனை ஒரு பதியிலார் விடுதிக்கு (ஹிஹி... அர்த்தம் புரிஞ்சதா??!!) அழைத்து செல்ல அங்கு மர்மமான முறையில் அவன் இறக்கிறான். அதற்கு பிண்ணனியில் உள்ள சதி என்னவென்று கணேச பட்டர் உதவியுடன் ஆராய அது இராஜ இராஜ சக்கரவர்த்தியை சேர, பாண்டியர்கள் கொலை செய்யும் சதியில் வந்து முடிகிறது. கதையின் முடிவை போட்டு உடைக்க விரும்பவில்லை. அதனால் படித்து தெரிந்து கொள்ளுங்களேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.

சரித்திரத்தின்படி பார்த்தால் காந்தளூரில் நிகழ்த்திய யுத்தம் தான் முதலாம் இராஜ இராஜ சோழன் நிகழ்த்திய மிகப் பெரிய துவந்த யுத்தம். கி.பி 994இல் சேரனும், பாண்டியனும் இணைந்து சோழர்களுக்கு எதிராக நடத்திய இந்த யுத்தத்தின் பின்னர் இராஜ இராஜன் மும்முடிச் சோழன் என்னும் புகழ் பெற்றான். காந்தளூர் இன்னும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. அதன் பின்னர் உதகை கோட்டை யுத்தம், அதன் தொடர்ச்சியாக இலங்கை யுத்தம். இப்படி தான் செல்கிறது முதலாம் இராஜ இராஜனின் வரலாறு. வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் புனைவு தானே. இந்த வரலாற்றில் கணேஷ், வசந்த் கதாப் பாத்திரங்களை புகுத்தியது தான் சுஜாதாவின் சாமர்த்தியம்.

நாவலின் ஆரம்பத்திலே சுஜாதா சொல்லி இருக்கிறார். ”கட் அவுட் கதாப்பாத்திரங்களாக அமைக்காமல் அவற்றை சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறேன்” என்றிருக்கிறார். உண்மை தான். கல்கியின் கதாப்பாத்திரங்களின் ரொமாண்டிஸிஸம் இங்கு சுத்தமாக இல்லை. கதையின் நாயகன் ஒழுக்க சீலனாக இல்லாமல், சூப்பர் ஹீரோ போல் காட்டாமல் மிகச் சாதாரணமாகக் காட்டி இருந்தார்.சரித்திரப் படி, மிகத் துல்லிய தகவல்களை தர மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். அங்கங்கே சுஜாதா டச். முதல் பாகத்திலேயே மசாலா மேட்டரை ஆரம்பித்திருந்தார் சுஜாதா ( பதியிலார் விடுதி!! இன்னும் புரியலையா??).இருப்பினும் கதையின் வேகத்தில் ஏனோ கொஞ்சம் மந்தம். வழக்கமான கணேஷ், வசந்த் நாவலின் சூடு இல்லை.

‘யவனிகா’ நாவலின் கடைசியில் வசந்த் சொல்வதாக ஒரு வரி வரும். “இந்த கதையைப் படமா எடுத்தா புரொடியூசர் வெடிகுண்டுக்கு செலவு பண்ணியே போண்டி ஆகிடுவார்”. சுஜாதா என்றும் தன் நாவல்களை திரைப்படமாக எடுக்கப் பட விரும்பியதில்லை. அதை தனது நாடகம் ஒன்றில் அவரே தெரிவித்து இருந்தார். ஆனால் என்னமோ இந்த நாவலைப் படிக்கும் போது மனதில் ஒரு பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் ஓடியது. கல்கியின் சரித்திர நாவல்களுக்கு, முக்கியமாக ‘பொன்னியின் செல்வனுக்கு’ ஒரு சமர்ப்பணம் போல் தான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

Share