Wednesday, March 13, 2013

'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு'

முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார்.

முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தில், மே முதல் ஆகஸ்ட் வரையான கோடை காலத்தில் பொதுவாக, என்னைப் போன்ற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு பதிவு செய்வதில்லை. காரணம் - பட்டப்படிப்பு முடிப்பதற்கான முக்கியமான வகுப்புகள் கோடை காலத்தில் நடக்காது. இந்த நேரத்தில் தான் இந்தியாவிற்கு போகவோ, அல்லது ஏதாவது கிடைத்த பகுதி நேர வேலையை பார்த்து கொண்டிருப்போம். நான் எனது புத்தகக் கடை வேலையையும், ஆய்வுக்கூட வேலை இரண்டையும் பார்த்து கொண்டு - கிடைத்த புத்தகங்களையும், கணக்கிலடங்கா திரைப்படங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். தூங்குவது என்னமோ, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே. 

கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன், நடத்தப்படும் வகுப்புகளுக்கான அட்டவணை ஒட்டப்படும். அதில் எனக்கு மிகவும் பிடித்ததொரு வகுப்பு இருந்தது. அது - "Science Fiction and Philosophy". ஒரு குறிப்பிட்ட வகுப்பு, உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது - ஆனால் அதற்கான முழுத் தொகையும் கட்ட வேண்டாமென்றால், அந்த வகுப்பை ஆடிட் செய்யலாம். அதாவது வகுப்பில் போய் உட்கார்ந்து பாடங்களை கவனிக்கலாம். ஆனால் பரீட்சை எழுதவோ, விவாதங்களிலோ பங்கெடுக்க முடியாது. அதே சமயம், ஆடிட் செய்யப்பட்ட வகுப்புகள், பட்டபடிப்பு முழுமைக்கு உதவாது. ஒவ்வொரு வகுப்பு பதியும் முன், முதுகலை ஆலோசகரை கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆலோசகர் பட்டபடிப்பு முழுமைக்கு நம்மை தயார் செய்யும் வகுப்புகளையே பரிந்துரைப்பார். மேலே சொன்ன வகுப்புக்கும், உயிரிமருத்துவ பொறியியலுக்கும் (BiomEdical Engineering), தர்க்க ரீதியில் தொடர்பு இருந்தாலும் - அந்த வகுப்பை எடுக்கிறேன் என்றால், என் ஆலோசகர் 'வெண்ணெய் வெட்டுற சிப்பாய்க்கு என்னத்துக்கு பத்து கத்தி' என்பது போல் என்னை பார்ப்பார்.

அதனால் அந்த வகுப்பை ஆடிட் செய்தேன். ஒரு வாரத்திற்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தொடர்ச்சியான வகுப்பு. முதல் வகுப்பில் ஹெச்.ஜி.வெல்ஸில் ஆரம்பித்து, ஸ்டெஃபனி மேயர் வரைக்கும், இருக்கிற Sci-Fi எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றி ஒரு சிறிய முன்னுரையை பேராசிரியர் கொடுத்தார். தன்னைக் கவர்ந்த திரைப்படங்களான 1984 மற்றும் THX 1138 பற்றியும் சிலாகித்து பேசினார். கேள்வி நேரத்தின் போது கேட்க்கப்பட்ட முதல் கேள்வி, "ஏன் இருக்கும் அத்தனை அறிவியல் புனைவு படைப்புகளும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையே பேசுகின்றன?". 

அதற்கு பேராசிரியர் - "எந்ததொரு படைப்பின் வெற்றியும் - அந்த படைப்பு வாசகர்கள் அல்லது பார்வையாளர்களை எப்படி பிரதிபலிக்கிறது என்பதில் இருக்கிறது. என்ன தான் மனிதன் நேர்மறையான எண்ணங்களோடு இன்றைய நாளை தொடர்ந்தாலும், நாளையை பற்றிய எதிர்பார்ப்புகளும், எதிர்மறை பயமும் அவனிடம் இல்லாமல் இல்லை. அறிவியல் புனைவுகள் நாளை பற்றிய மனிதனின் பயங்களை அட்சர பிசகில்லாமல் பிரதிபலித்தன. அதனால் அவை நன்றாக விற்றன. அதைப் பற்றிய தர்க்க ரீதியான விவாதங்களுக்கு தானே நீங்கள் இந்த வகுப்பிற்கு வந்துள்ளீர்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அந்த தர்க்க ரீதியான விவாதங்களை இங்கு எழுதினால், TLTR (Too Long to Read) என்று எழுந்தோடி விடுவீர்கள்.

அந்த வகுப்பு பல கேள்விகளையும், சில தெளிவுகளையும் எனக்கு தந்தது. அப்போது தமிழில் என் துறை, அதாவது உயிரிதொழில்நுட்பத்தை (Biotechnology) மையமாகக் கொண்ட சிறுகதைகள், எத்தனை இருக்கின்றன என யோசித்த போது, மூன்று நினைவிற்கு வந்தன. சுஜாதாவின் 'உயிர்', இரா.முருகனின் 'சில்லு' மற்றும் ஹரன் பிரசன்னாவின் 'மஹான்'.

எல்லோருக்கும் போல், எனக்கும் சுஜாதா வாத்தியார் தான். குமுதத்தில் அவர் எழுதிய 'ஜீனோம்' தொடர், கல்லூரியில் பயோடெக்னாலஜியை விருப்ப பாடமாக எடுக்க பெரிய உந்துகோலாக அமைந்தது. 'உயிர்' கதையின் நிகழ்களம், 'என் இனிய இயந்திரா' போல் ஒரு எதிர்கால சர்வாதிகார அமைப்பின் கீழ் இயங்க்கும் நாடு. மரபணுக்களை வெட்டி ஒட்டும் தொழில்நுட்பமான ரீகாம்பினண்ட் டி.என்.ஏ டெக்னாலஜி மூலம் ஒரு உயிரை, விஞ்ஞானி ஒருவர் உருவாக்குகிறார். அந்த உயிரை அந்த அமைப்பின் பிடியில் இருந்து தப்புவிக்க என்ன செய்கிறார் என்பதே கதை. வழக்கமான தொழில்நுட்ப  சம்பாஷனைகள் இல்லாமல், இந்த கதையில் விஞ்ஞானி, அவர் தஞ்சம் புகும் வீட்டில் இருப்போர், அவர்களின் பாத்திர படைப்பும், உரையாடலுமே கதையை நகர்த்துகிறது. இறுதியில் அந்த விஞ்ஞானியும், அவர் படைத்த உயிரும் என்னவாகிறது என்பதே கதை.

சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்' தொகுப்பின் முதல் கதை இது. இப்போது படித்தால் மிகச் சாதாரண கதையாக தோன்றினாலும், பிரமிப்பை ஏற்படுத்துவது, கதை வெளியான காலம். 90களின் ஆரம்பத்தில், ரீகாம்பினண்ட் டி.என்.ஏ தொழில்நுட்பம் என்றால் என்னவென்று தெரியாத கட்டத்தில் - தமிழ் கூறும் நல்லுலகிற்கு இது போன்ற கதைகளின் மூலமாக பாடம் எடுத்திருக்கிறார் சுஜாதா.

'சில்லு' - இரா.முருகனின் 'சைக்கிள் முனி' சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ​இந்த கதையை நண்பன் ஒருவனுக்கு படிக்க கொடுக்க, அவன் படித்த பிற்பாடு 'எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாயிருக்கிறது' என்றான். 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடப்பதாக கதை இருக்கிறது. ஒவ்வொரு பிறக்கும் குழந்தைக்கும், அவர்களின் உடலில் ஒரு சிலிக்கான் சில்லு பதிக்கப்படுகிறது. கதையின் நாயகன் ஆணாக இருப்பினும், அவனை பெண் என்று சில்லு கூறுகிறது. அந்த சில்லை வடிவமைத்த விஞ்ஞானிகள், அதில் ஒரு தகிடுதத்தம் செய்து விடுகின்றனர். அதனால் கதாநாயகன் என்ன பாதிப்படைகிறான் என்பதே கதை.

மரபணு மாற்றியமைக்கப்பட்டு சாப்பிட லாயக்கில்லாத முட்டைகோஸ், கட்டாயமாக்கப்படும் ஒரு பால் திருமணங்கள் போன்ற  இடைச்சொருகல்கள்,  சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் கட்டமைக்கும் Dystopian vision'ஐ கொண்டிருந்தாலும், மிகவும் சுவாரசியமாக கதையை நடத்தி செல்லுகின்றன.

இளங்கலை படித்து கொண்டிருந்த போது, அவ்வப்போது திண்ணை.காமை மேய்ந்து கொண்டிருப்பேன். அப்போது கண்ணில் சிக்கியது தான், ஹரன் பிரசன்னாவின் "மஹான்" சிறுகதை. சேமித்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் மரபணுவை கொண்டு, பலபடியாக்கம் (Cloning) மூலம் மற்றொரு காந்தியை உருவாக்குகின்றனர். அவர் மேற்கொள்ளும் சவால்கள் தான் கதை. கதையில் சிற்சில கால வேறுபாடு குறைகள் இருந்தாலும், பாத்திர படைப்பில் செலுத்தப்பட்ட கவனம் தான் இச் சிறுகதை இன்றளவும் என் நினைவில் இருக்கிறது.

இரா.மு ஒரு முறை ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு இது. "தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகள் வெளிவராமல் இருக்க அல்லது குறைய ஒரு காரணம், யாருக்கும் அடிப்படை அறிவியல் கூறுகளை அறிய ஆர்வமின்மை" என்றார். பல வகையில் உண்மையே.

Share